பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச பஞ்சாமிர்தம்

பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

Update: 2022-04-23 16:41 GMT
பழனி:

பழனி முருகன் கோவில்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அந்தந்த கோவிலின் பிரசாதம் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டது. 

அதன்படி அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் பிரசாதமாக பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பேப்பர் கப்பில் 40 கிராம் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சாமிர்தத்தை ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  

பக்தர்கள் வரவேற்பு

பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டம், பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து பழனிக்கு வந்திருந்த பக்தர்கள் கூறியதாவது:-

நந்தா (உளுந்தூர்பேட்டை):
தமிழகத்தில் உள்ள ஆன்மிக தலங்களில் அதிக பக்தர்கள் வருகை தரும் கோவிலாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள விற்பனை நிலையங்களில் பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர். ஆனால் பிரசாதமாக கோவிலில் பஞ்சாமிர்தம் வழங்க வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது அது நிறைவேறி உள்ளது. தமிழக அரசுக்கு மிகுந்த நன்றி.

சுவாதி (சென்னை): 

தமிழகம் முழுவதும் அந்தந்த கோவிலின் பிரசாதம் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் திட்டம் மிகுந்த வரவேற்புக்கு உரியது. ஏனெனில் தனியார் கடைகளில் காசு கொடுத்து வாங்குவதை காட்டிலும், கோவிலில் வழங்கப்படுவதை பக்தர்கள் அதிகம் விரும்புவார்கள். அந்தவகையில் குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய பிரசாதமான பஞ்சாமிர்தம் பழனி முருகன் கோவிலில் வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி.

அழகர் (பழனி):

திருப்பதிக்கு அடுத்தபடியாக பழனிக்கு தான் அதிகமாக பக்தர்கள் வருகின்றனர். திருப்பதியில் பிரசாதமாக லட்டு வழங்குவதை போல் பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் இலவசமாக வழங்க வேண்டும் என்ற பக்தர்களின் நீண்டகால கோரிக்கை தற்போது நிறைவேறி உள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதேபோல் திருநீறு, குங்குமம் போன்றவையும் இலவசமாக வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்