கழுத்தை இறுக்கி இளம்பெண் படுகொலை

வேடசந்தூர் அருகே, கள்ளக்காதலை கைவிடாததால் கழுத்தை இறுக்கி இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2022-04-23 16:31 GMT
வேடசந்தூர்:

 இளம்பெண்ணுக்கு கள்ளக்காதல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கெண்டையகவுண்டனூர் நால்ரோடு பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 30). இவரது மனைவி காளீஸ்வரி (25). இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

மணிகண்டனும், காளீஸ்வரியும் சுள்ளெறும்பில் உள்ள தனியார் நூற்பாலையில் தொழிலாளர்களாக பணிபுரிந்தனர். காளீஸ்வரிக்கு, அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. 

இதனை அறிந்த மணிகண்டன், காளீஸ்வரியை கண்டித்தார். இருப்பினும் அவர், கணவர் பேச்சை கேட்காமல் தனது கள்ளக்காதலை தொடர்ந்தார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
 
 கழுத்தை இறுக்கி கொலை

இந்தநிலையில் நேற்று காலை 2 குழந்தைகளையும் மணிகண்டனின் தாயார், தனது தோட்டத்துக்கு அழைத்து சென்று விட்டார். மணிகண்டனும், காளீஸ்வரியும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தனர்.

அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், துண்டால் காளீஸ்வரியின் கழுத்தை இறுக்கினார். சிறிதுநேரத்தில் காளீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் மணிகண்டன், வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்த போலீசாரிடம், தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார்.

 கைது-வாக்குமூலம்

இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

பின்னர் காளீஸ்வரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

கைதான மணிகண்டன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனக்கும், காளீஸ்வரிக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் காளீஸ்வரிக்கும், வேறு ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. 

இதனை கைவிடுமாறு அவரிடம் பலமுறை வற்புறுத்தினேன். இருப்பினும் என்னுடைய பேச்சை அவர் கேட்கவில்லை. கள்ளக்காதலனை தனிமையில் சந்தித்து வந்தார். மேலும் செல்போனில் பலமணி நேரம் அவருடன் பேசி கொண்டிருந்தார்.

இது தொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. காளீஸ்வரியை கண்டித்தும், அடித்தும் திருந்தவில்லை. அதன்படி சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த நான், துண்டால் காளீஸ்வரியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். 

அவர் இறந்ததை உறுதி செய்தபிறகு நேராக போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தேன்.
இவ்வாறு மணிகண்டன் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்