தூத்துக்குடியில் பலத்த மழை; சேறும் சகதியுமாக மாறிய பஸ்நிலையம்
தூத்துக்குடியில் நேற்று திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் தற்காலிக பஸ்நிலையம் சேறும் சகதியுமாக மாறியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நேற்று திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் தற்காலிக பஸ்நிலையம் சேறும் சகதியுமாக மாறியது.
பலத்த மழை
தமிழகத்தில் தற்போது வெப்ப சலனம் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையாக வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று அதிகாலையில் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளான பிரையண்ட் நகர், அண்ணா நகர், டூவிபுரம், லூர்தம்மாள்புரம், திரேஸ்புரம் போன்ற பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மேலும் தற்காலிக பஸ் நிலையம் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். மேலும் தூத்துக்குடியில் அதிகாலை முதல் மழை பெய்ததால் காலையில் அலுவலகம் செல்பவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
உப்பளங்கள் நீரில் மூழ்கின
இதேபோல் முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதியிலும் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மழை நீரில் உப்பளங்கள் மூழ்கியதால் உப்பு உற்பத்தி முற்றிலும் முடங்கியது.
இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் விஜய் கூறியதாவது:-
கடந்த 2 வாரத்திற்கு முன்பாக இந்த பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் உப்பு உற்பத்தி செய்ய முடியவில்லை. உப்பு உற்பத்தி செய்யப்படும் பாத்திகளில் அதிக அளவு மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி முடங்கியது. தற்சமயம் உப்பளத்தில் தேங்கிய மழை நீரை, அகற்றி பாத்திகளை உப்பு உற்பத்திக்கு தயார் செய்து வந்தோம். இந்த நிலையில் நேற்று அதிகாலை முத்தையாபுரம், முள்ளக்காடு, கோவளம், மதகிரி உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. ஒரு மணி நேரம் கன மழையும், அதனை தொடர்ந்து ஒரு மணிநேரம் சாரலுடன் கூடிய மழையும் பெய்தது. இதனால் உப்பு உற்பத்தி செய்யப்படும் பாத்திகளில் மீண்டும் மழைநீர் அதிக அளவில் தேங்கியதால், உப்பு உற்பத்தி செய்யப்படும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த திடீர் மழையினால் உப்பு தொழிலை நம்பி இருந்த உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். அதுபோல உப்பள உரிமையாளர்களும் உப்பு உற்பத்தி செய்வதற்கு அதிக அளவில் செலவு செய்து அனைத்தும் வீணாகி போனதால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
மழை அளவு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
திருச்செந்தூர்- 4, காயல்பட்டினம்-7, குலசேகரன்பட்டினம்-12, விளாத்திகுளம்-3, வைப்பார்-24, சூரங்குடி-36, கோவில்பட்டி-4, கழுகுமலை-2, கயத்தாறு-26, கடம்பூர்-25, ஓட்டப்பிடாரம்-6, வேடநத்தம்-25, கீழஅரசரடி-2, எட்டயபுரம்-16.4, சாத்தான்குளம்-34.4, தூத்துக்குடி-24.