பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமல்; மந்திரி அசோக் தகவல்
பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக கர்நாடகத்தில் கடுமையான சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக முதல்-மந்திரியுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மந்திரி அசோக் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் இன்று வருவாய்த்துறை மந்திரி அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பசவராஜ் பொம்மையுடன் ஆலோசனை
உப்பள்ளியில் பொதுமக்களின் அமைதியை கெடுக்கும் விதமாக கலவரத்தில் ஈடுபட்டு பொது சொத்துகளை சேதப்படுத்தி உள்ளனர். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை கெடுக்கவும், மக்களிடையே அசாதாரண சூழ்நிலையை உருவாக்கவும் சில சமூக விரோதிகள் முயற்சிக்கிறார்கள். இதுபோன்று கலவரத்தில் ஈடுபட்டோருக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டியது அவசியமாகும்.
இதற்காக கடுமையான சட்டங்களை கொண்டு வரவேண்டும். உத்தரபிரதேச மாநிலத்தில் கலவரத்தில் ஈடுபட்டு, பொதுமக்களின் அமைதியை கெடுப்பவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து அகற்றும் வகையில் கடுமையான சட்டம் அமலில் இருக்கிறது. உத்தரபிரதேச மாதிரியில் கர்நாடகத்திலும் கடுமையான சட்டத்தை அமல்படுத்துவது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசிக்கப்படும்.
காங்கிரஸ் பிரமுகருக்கு தொடர்பு
ஏனெனில் கலவரத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் அமைதியை கெடுப்பதுடன், பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்கள் வசிப்பதற்கு வீடு இருக்க கூடாது. அந்த வீட்டை இடித்து அகற்ற வேண்டும். நமது நாட்டில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்புபவர்களை சகித்து கொண்டு இருக்க முடியாது. அனைவரையும் சந்தேகத்துடன் பார்க்கவில்லை. ஆனால் சிலர் கலவரத்தில் ஈடுபட்டு, மாநிலத்தில் அமைதியை கெடுக்கிறார்கள்.
பெங்களூரு கே.ஜி.ஹள்ளியில் கலவரத்தை தூண்டியவர்கள், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் கட்சியினர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி பொதுமக்கள். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்திலும் காங்கிரஸ் பிரமுகருக்கு தொடர்பு இருக்கிறது. அதுபற்றி காங்கிரஸ் தலைவர்கள் பேசுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.