வால்பாறையில் பலத்த இடியுடன் ஆலங்கட்டி மழை
வால்பாறையில் பலத்த இடியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
வால்பாறை
வால்பாறையில் பலத்த இடியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கோடை மழை
வால்பாறை பகுதியில் கடந்த ஒரு மாதகாலமாக கோடைமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. வால்பாறை நகரில் மழை பெய்யாத நிலையில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் இந்த கோடைமழை காரணமாக வால்பாறை பகுதி குளிர்ந்து பசுமைக்கு திரும்பி விட்டது. சாதாரணமாக வால்பாறை பகுதியை பொறுத்தவரை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒருசில சமயங்களில் கோடைமழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு கோடைமழையுடன் சேர்த்து தமிழகத்தில் நிலவி வரும் வெப்பசலனம் காரணமாகவும் வால்பாறை பகுதியில் மழை பெய்து வருகிறது.
திடீர் நீர் வீழ்ச்சிகள்
கோடைமழை தேயிலை விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வால்பாறை பகுதியில் காலை முதல் மதியம் 12 மணி வரை வெயில் அடித்தது. பின்னர் மதியம் 1 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழந்தன. பின்னர் மழை பெய்யத்தொடங்கியது. அப்போது இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை மாலை 4 மணி வரை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பாரளை பாறைமேடு பகுதியில் திடீர் நீர் வீழ்ச்சிகள் தோன்றி தண்ணீர் அருவிகளாய் கொட்டியது.
மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
வால்பாறை நகரில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகராட்சி மார்க்கெட் பகுதிக்கு செல்லும் நடைபாதை படிக்கட்டுகளில் மழைநீர் பாய்ந்து ஓடியதால் மக்கள் நடக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். 2 சக்கர வாகன ஒட்டிகள் வாகனங்களை ஒட்டமுடியாமல் ஆங்காங்கே சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு கடைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் தேயிலை தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வால்பாறையில் நேற்று 76 மில்லி மீட்டர் மழையும், நீராரில் 24 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.