விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் ரூ.150 கோடியில் பாதாள சாக்கடை அமைக்கப்படும்
கடலூரில் புதிய பஸ் நிலையம் கட்ட ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் ரூ.150 கோடியில் பாதாள சாக்கடை அமைக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூர்,
கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், நகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன், துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
இதில் நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, நகர செயலாளர் ராஜா, மண்டல குழு தலைவர்கள் த.சங்கீதா, பிரசன்னகுமார், செ.சங்கீதா, இளையராஜா, கல்விக்குழு தலைவர் ராஜமோகன், நியமனக்குழு உறுப்பினர் கிரேசி, வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சசிகலா ஜெயசீலன், கணக்கு குழு தலைவர் செந்தில்குமாரி இளந்திரையன், கவுன்சிலர்கள் கண்ணன், புஷ்பலதா, அருள்பாபு, விஜயலட்சுமி செந்தில், சுபாஷினி ராஜா மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய பஸ் நிலையம்
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு கடந்த காலங்களை விட முதல்-அமைச்சர் அறிவித்த பல திட்டங்களை கொண்டு வந்து நகரை அழகுபடுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த கால பணிகள் மற்றும் அரசு ஒதுக்கிய நிதி குறித்து இந்த 10 மாதத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் விரிவுபடுத்தப்பட்ட 9 வார்டுகளில் ரூ.150 கோடியில் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கப்படும்.
முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடலூர் மாவட்டத்தில் 20 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. கடலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.56 கோடி வரி பாக்கி
அதாவது கடலூர் மாநகரத்திற்கு ரூ.30 கோடியில் புதிய பஸ் நிலையம், ரூ.150 கோடி பாதாள சாக்கடை விரிவாக்கத்திற்கும் மற்றும் வடிகால், நமக்கு நாமே திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாநகராட்சியில் தற்போது சுமார் ரூ.56 கோடி வரி பாக்கி உள்ளது. இதற்கு காரணம் நீண்ட காலமாக வரி வசூல் செய்யப்படவில்லை. மக்கள் வரி கட்டினால் இன்னும் மாநகராட்சியை தூய்மையாக வைத்து, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும். அதற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தேவை அதிகளவு உள்ளது. அதனை தீர்க்க கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
10 ஆண்டு குப்பை அகற்றம்
கடலூரில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதுடன், சாக்கடை, குப்பைகள் அகற்றும் பணி நடந்தால் மாநகரம் தூய்மையாக இருக்கும். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக மேயர், துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாநகராட்சியில் அடிப்படை பணியாளர்கள் இல்லாததால் தான் மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்க முடியாத நிலை உள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை. 10 ஆண்டுகளாக தேங்கி கிடந்த குப்பைகள் தற்போது தான் அகற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.