மின்வெட்டு பிரச்சினையை தீர்க்க வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி- அஜித்பவார் தகவல்
மின்வெட்டு பிரச்சினையை தீர்க்க வெளிநாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய உள்ளதாக துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்.
மும்பை,
மின்வெட்டு பிரச்சினையை தீர்க்க வெளிநாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய உள்ளதாக துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து நிலக்கரி
மராட்டியத்தில் நிலக்கரி தட்டுப்பாடு, கோடை காலம் காரணமாக மின்சார தேவை அதிகரித்து இருப்பதால் மின்வெட்டு பிரச்சினை நிலவி வருகிறது. மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் தினந்தோறும் 2 முதல் 4 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. இதில் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் மின்வெட்டு பிரச்சினை இல்லை என மின்சார துறை மந்திரி நிதின் ராவத் கூறியுள்ளார்.
இந்தநிலையில் மாநிலத்தில் மின்வெட்டு பிரச்சினையை தீர்க்க வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நாட்டில் வழக்கமாக செய்யப்படுவது போல நிலக்கரி வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் மாநிலத்தில் மின்வெட்டு பிரச்சினை நிலவி வருகிறது.
சத்தீஸ்காரில் சுரங்கம்
இதுதொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். மேலும் மின்வெட்டு தொடர்பாக ஒவ்வொரு வாரமும் நான் மின்சார துறையினருடன் ஆய்வு செய்து வருகிறேன். நாட்டில் எந்த பகுதியில் இருந்தாலும், தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கவும் மந்திரி சபை ஒப்புதல் அளித்து உள்ளது. தடையின்றி மின் வினியோகம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்களுக்கு நிலக்கரி குறைந்தளவில் வினியோகம் செய்யப்படுகிறது.
மராட்டியத்திற்கும் போதிய அளவு நிலக்கரி கிடைக்கவில்லை. எனவே தான் நாங்கள் வெளிநாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய முடிவு செய்தோம். மராட்டியத்திற்காக ஒரு நிலக்கரி சுரங்கத்தை பெறும் முயற்சியும் நடந்து வருகிறது. மராட்டியத்துக்கு ஒரு நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்க சத்தீஸ்கார் அரசை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டு கொண்டு உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே நேரத்தில் நிலக்கரி தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசை குற்றம்சாட்ட அஜித்பவார் மறுத்துவிட்டார்.