மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில்பக்தர்களுக்கு தினசரி இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது
மருதமலைசுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்களுக்கு தினசரி இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது
வடவள்ளி
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய கோவில்களில் தினசரி இலவசமாக பிரசாதம் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
இதையொட்டி கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை காணொலி மூலம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இதில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் செந்தில் வேலவன் கலந்து கொண்டார்.
இது குறித்து மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உதவி ஆணையர் பொறுப்பு விமலா கூறியதாவது
இத்திட்டத்தின் படி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை திறப்பது முதல் நடை சாற்றப்படும் வரை இலவசமாக பஞ்சாமிருதம், கற்கண்டு சாதம், திணை மாவு லட்டு, புளியோதரை, சம்பா சாதம் ஆகிய 5 வகையான பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் 10 ஆயிரம் பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படும்.
இந்த திட்டம் தினசரி ரூ.1.50 லட்சம் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் கூறுகையில், மருத மலையில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இலவசமாக 5 வகையான பிரசாதம் வழங்கும் திட்டம் மிகவும் திருப்தி அளிக்கிறது என்றார்.