கும்மிடிப்பூண்டி அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-2 மாணவர் சாவு
கும்மிடிப்பூண்டி அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-2 மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த காயலார்மேடு கிராமத்தை சேர்ந்தவர் ரித்திக்குமார் (வயது 17). இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசினர் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று தனது நண்பர்களோடு சேர்ந்து கும்மிடிப்பூண்டியில் இருந்து புறநகர் மின்சார ரெயிலில் ரித்திக்குமார் சென்னை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. மின்சார ரெயில் கவரைப்பேட்டைக்கும் பொன்னேரிக்கும் இடையே சென்று கொண்டிருந்தபோது ரித்திக்குமார் ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.