பல்லாவரம் வாரச்சந்தையில் புஷ்பவனம் குப்புசாமியின் செல்போன் திருட்டு
பல்லாவரம் வாரச்சந்தையில் புஷ்பவனம் குப்புசாமியின் செல்போனை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த பல்லாவரத்தில், பழைய டிரங்க் சாலையில், வாரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச் சந்தை நடக்கிறது. இந்த சந்தையில் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கின்றன. இதனால் வெள்ளிக்கிழமை தோறும் பல்லாவரம் பழைய டிரங்க் சாலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்.
இந்தநிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம், விஸ்வநாதன் தெருவில் வசிக்கும் பிரபல கிராமிய பாடகரும், திரைப்பட பின்னணி பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி(வயது 60) நேற்று காலை பல்லாவரம் வாரச்சந்தைக்கு தனது காரில் வந்தார்.
சந்தையில் செடிகள் வாங்கினார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது அவரது சட்டை பையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.
இதேபோல் சந்தையில் பொருட்கள் வாங்க வந்த மேலும் 7 பேரின் செல்போன்களும் திருடு போய் உள்ளது. இதுபற்றி பல்லாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.