தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நைட்டிங்கேல் சிலை அமைக்க தடை
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நைட்டிங்கேல் சிலை அமைக்க தடை விதித்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார்.
ஆண்டிப்பட்டி:
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் சிலை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு என்னுமிடத்தில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில், செவிலியர் குடியிருப்பு உள்ளது. இங்கு, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் சிலை நிறுவ முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பூமி பூஜை நடத்தப்பட்டது.
அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ, சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இதற்கிடையே அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அனுமதி பெறாமல் சிலை நிறுவ முயற்சிப்பதாகவும், இதற்காக மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களிடம் கட்டாயமாக பணம் வசூலிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
தடை உத்தரவு
இந்தநிலையில் மருத்துவமனை வளாகத்துக்குள் சிலை நிறுவுவதற்கான எந்த பணிகளும் நடைபெறக்கூடாது என்று கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து சிலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே மருத்துவமனை வளாகத்திற்குள் அனுமதியின்றி சிலை வைக்க பூமி பூஜை நடத்தப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் இந்து எழுச்சி முன்னணி ஆகிய கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செவிலியர்கள் தரப்பில் கேட்டபோது, தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனரகத்திடம் அனுமதி பெற்றுதான் சிலை அமைக்க பூமி பூஜை செய்ததாகவும், அதன்பின்னர் மருத்துவ கல்லூரி முதல்வர் தடைவிதித்ததால் மேற்கொண்டு எந்த பணிகளும் செய்யவில்லை என்றனர். இந்த சம்பவத்தால் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.