தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்
தமிழ்புத்தாண்டை முன்னிட்டு கோவை கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காட்டூர் முத்து மாரியம்மனுக்கு நகை, ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
கோவை
தமிழ்புத்தாண்டை முன்னிட்டு கோவை கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காட்டூர் முத்து மாரியம்மனுக்கு நகை, ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
தமிழ்புத்தாண்டு
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ்புத்தாண்டை கொண்டாடினர். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்புத்தாண்டு அன்று கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து உள்ள நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டிற்கு கோவில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கோனியம்மன், சித்தாபுதூர் அய்யப்பன் கோவில், தண்டுமாரியம்மன், புலியகுளம் விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
2½ டன் பழங்கள்
இதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவை புலியகுளத்தில் ஆப்பிள், ஆரஞ்சு, பலாப்பழம் அன்னாசி, வாழைத்தார், மாதுளை, கொய்யா என 2½ டன் அளவிற்கு பழங்களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன.
தொடர்ந்து விநாயகருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் காலையில் இருந்து வரிசையில் நின்று காணிக்கையாக அருகம்புல் சாத்தி வழிபட்டனர். இதேபோல் பீளமேட்டில் உள்ள ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8 பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
கோவை காட்டூர் முத்து மாரியம்மனுக்கு ரூ.4½ கோடி அளவிற்கு தங்கம் மற்றும் வைர நகைகள், ரூபாய் நோட்டுகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் இந்த பகுதி பொதுமக்கள் தமிழ்புத்தாண்டு அன்று தங்களிடம் உள்ள பணம் மற்றும் நகைகளை அம்மனுக்கு வழங்குவார்கள். இந்த நகை மற்றும் ரூபாய் நோட்டுகள் கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்படும்.
பின்னர் அன்றைய தினம் மாலையே உரியவர்களிடம் அந்த பணம் மற்றும் நகைகள் ஒப்படைக்கப்படும்.
நாணயம் பிரசாதம்
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இதுபோன்ற சிறப்பு அலங்காரம் செய்யப்படவில்லை. தற்போது தொற்று குறைந்ததால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் அம்மனை தரிசித்து செல்லும் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணயம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோல் ஆவாரம்பாளையத்தில் உள்ள சீர்காழி மாரியம்மனுக்கு 5 லட்சம் ரூபாய் நோட்டுகளாலும், டி.கே. மார்க்கெட்டில் உள்ள மாரியம்மனுக்கு எலுமிச்சை பழம், வாழைப்பழம், ஆரஞ்சு உள்பட பல்வேறு பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
பக்தர்கள் அதிகாலை முதல் கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஈச்சனாரி விநாயகர் கோவில், பாப்பநாயக்கன்பாளையம் பெருமாள் கோவில், உக்கடம் நரசிம்மர் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.