தூய்மை பணியாளர்கள்-ஒப்பந்த தொழிலாளர்கள் நகராட்சி தலைவரிடம் மனு
தூய்மை பணியாளர்கள்-ஒப்பந்த தொழிலாளர்கள் நகராட்சி தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், நகராட்சியில் தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதி உரியவரின் கணக்கில் செலுத்தப்படாமல் இருந்து வருகிறது. அந்த வைப்பு நிதியை உரியவரின் கணக்கில் செலுத்த வேண்டும். மேலும் முந்தைய ஒப்பந்த காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வைப்பு நிதியை உரியவரின் வங்கி கணக்கில் அல்லது வைப்பு நிதி கணக்கில் செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கலெக்டர் அறிவித்த தினக்கூலியை நிலுவை தொகையுடன் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிட வேண்டும். பல ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க அரசுக்கு வலியுறுத்த வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள், சீருடை வழங்கிட வேண்டும். மே தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.