தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-04-11 18:10 GMT
கம்பம் அகற்றப்பட்டது
மார்த்தாண்டம்-குலசேகரம் சந்திப்பு சாலையில் உண்ணாமலைக்கடை பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் எதிரே சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த பி.எஸ்.என்.எல் தகவல்தொடர்பு  நிறுவனத்தின் கம்பம் ஒன்று சேதமடைந்து முறிந்து விழும் நிலையில் இருந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சேதமடைந்த கம்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அகற்றினர். செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
வடிகால் வசதி தேவை 
அழகியபாண்டியபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பிளவக்கல்விளை  9-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் முறையாக வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, மழைநீர் வடிந்தோட வடிகால் ஓடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                        -பிராங்கிளின் கனிஷ்குமார், எட்டாமடை.
வாய்க்காலை சீரமைக்க வேண்டும்
குலசேகரம்-பொன்மனை செல்லும் சாலையில் ஆரியாம்பகோடு பகுதியில் சாலையின் குறுக்கே வாய்க்கால் ஒன்று செல்கிறது. இந்த வாய்க்காலில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடைப்பு ஏற்பட்ட பகுதி இதுவரை சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி விவசாயிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். எனவே, சேதமடைந்த வாய்க்காலை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                    -ஸ்டாலின், செறுதிகோணம்.
எரியாத மின்விளக்குகள்
 சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளமடம் சந்திப்பு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் பழுதடைந்து கடந்த சில நாட்களாக எரியாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை பொருத்தி எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                              -தர்மராஜன்,  அனந்தபத்மநாபபுரம்.
சாலை வசதி வேண்டும்
தேரேகால்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட புரவசேரி, காந்திநகர் பகுதியில் சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மழை காலத்தில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலை  வசதி ஏற்படுத்தித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-ஜோஸ்மேரி, காந்தி நகர்.

மேலும் செய்திகள்