மாணவியை காதலிப்பதில் போட்டி; மாணவர்கள் மோதல்

சங்கராபுரத்தில் மாணவியை காதலிப்பதில் ஏற்பட்ட போட்டியில் மாணவர்கள் மோதி கொண்டனர்.

Update: 2022-04-11 18:06 GMT
சங்கராபுரம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் ஒரு மாணவரும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வரும் ஒரு மாணவரும் பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. மாணவர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் சங்கராபுரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அந்த பள்ளி மாணவருக்கும், கல்லூரி மாணவருக்கும் இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பை சேர்ந்த மாணவர்களும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதுகுறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரு தரப்பை சேர்ந்த மாணவர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறியதோடு, இனி இதுபோன்று தகராறில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்து மாணவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மாணவிக்காக 2 பேர் போட்டியிட்டு தகராறில் ஈடுபட்ட மாணவர்களால் சங்கராபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்