அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி நீக்கம் செல்லும் தீர்ப்பு குறித்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வேன் நாமக்கல்லில் சசிகலா பேட்டி

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி நீக்கம் செல்லும் தீர்ப்பு குறித்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வேன் நாமக்கல்லில் சசிகலா பேட்டி

Update: 2022-04-11 17:56 GMT
நாமக்கல்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என சென்னை உரிமையியல் கோர்ட்டு அளித்த தீர்ப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வேன் என நாமக்கல்லில் சசிகலா கூறினார்.
சாமி தரிசனம்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் செய்து சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர்கள் ஆஞ்சநேயர் படம் மற்றும் பிரசாதம் வழங்கினர். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவரிடம் நிருபர்கள், உங்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என சென்னை உரிமையியல் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளதே? என கேள்வி எழுப்பினர். 
அதற்கு அவர் இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முன்னதாக திருச்சியில் இருந்து கார் மூலம் நாமக்கல் வந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்த நிர்வாகிகள் வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். நாமக்கல்லில் சாமி தரிசனத்தை முடித்து கொண்டு அவர், திருச்செங்கோட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
திருச்செங்கோடு
இதையடுத்து சசிகலா திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தரிசனத்தை முடித்து விட்டு காரில் இருந்தவாறு நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- 
அ.தி.மு.க.வில் தொண்டர்கள் தான் அடித்தளம். எம்.ஜி.ஆர். உருவாக்கிய சட்ட திட்ட விதிகளின்படி கடைக்கோடி கட்சியின் தொண்டர்கள் தான் ஒரு பொதுச்செயலாளரை தீர்மானம் செய்ய முடியும். தற்போது அ.தி.மு.க. தொடர் தோல்விகளை சந்தித்து இருக்கிறது. அதில் இருந்து மீட்டெடுத்து 100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. அழியாமல் இருந்து ஆட்சி பொறுப்பேற்க பாடுபட வேண்டும். அதை நிறைவேற்றுவது எனது கடமை. கால சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் தான் செயல்பட முடியும். எனது 33 ஆண்டு கால அனுபவத்தில் சொல்கிறேன். இதுவும் கடந்து போகும். 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்