ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2022-04-11 17:55 GMT
ஓசூர்:
ஓசூர் மாநகராட்சி கூட்டம் நேற்று மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை தொடங்கிவைத்து மேயர் சத்யா பேசுகையில், ஓசூர் மாநகராட்சிக்கு சொந்தமான காமராஜ் காலனியில் உள்ள விளையாட்டு திடலுக்கு, கலைஞர் மு.கருணாநிதி விளையாட்டு திடல் என்று பெயர் சூட்டவும், சொத்து வரி உயர்வு உள்பட 9 தீர்மானங்களை மன்றத்தின் ஒப்புதலுக்கு வைத்து, அவற்றை நிறைவேற்ற ஒத்துழைப்பு தருமாறு, கேட்டு கொண்டார். 
தொடர்ந்து சபையில் கவுன்சிலர் எஸ்.நாராயணன் (அ.தி.மு.க.) பேசுகையில், காமராஜ் காலனியில் உள்ள விளையாட்டு திடலுக்கு, ஜெயலலிதா விளையாட்டு திடல் என்று பெயர் சூட்ட வேண்டும். மாமன்றத்தில், முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜானகி எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் படங்களை வைக்க வேண்டும் என்று கூறினார். அப்போது ஓசூர் மாநகராட்சி பகுதியில் நிலுவையில் உள்ள வரி பாக்கிகளை வசூல் செய்வது குறித்தும், சொத்து வரி உயர்வு தொடர்பாகவும் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும், அவர்கள் தீர்மான நகல்களை கிழித்து எறிந்து தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இவர்களுக்கு ஆதரவளித்து பா.ஜ.க. கவுன்சிலர் பார்வதி நாகராஜ், தர்ணாவில் கலந்து கொண்டார். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேறியதாக, மேயர் சத்யா அறிவித்தார். 

மேலும் செய்திகள்