அஞ்செட்டி அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்
அஞ்செட்டி அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள கேரட்டி மலை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அசோக்ராஜ் என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். இவர் அடிக்கடி விடுமுறை எடுத்து கொள்வதாகவும், பணிக்கு ஒழுங்காக வருவதில்லை எனவும் மாணவர்களின் பெற்றோர் கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியரை எச்சரிக்கை செய்தனர்.
இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, தளி வட்டார கல்வி அலுவலர் பால்ராஜ் ஆகியோர் கேரட்டி அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று திடீரென ஆய்வு செய்தனர். அப்போது தலைமை ஆசிரியர் அசோக்ராஜ் பணியில் இல்லை. இதையடுத்து பணிக்கு சரியாக வராத தலைமை ஆசிரியர் அசோக்ராஜை பணி இடைநீக்கம் செய்து கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.