வேலூர் லாங்குபஜாரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய போலீசார்
வேலூர் லாங்குபஜாரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆக்கிரமிப்பு கடைகளை போலீசார் அகற்றினர்.
வேலூர்
வேலூர் லாங்குபஜாரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆக்கிரமிப்பு கடைகளை போலீசார் அகற்றினர்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
வேலூர் லாங்குபஜாரில் நேதாஜிமார்க்கெட்டை ஒட்டியுள்ள பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து ஏராளமாக தள்ளுவண்டி கடைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளால் அந்த பகுதியில் வாகனநெரிசல் ஏற்பட்டது. மேலும் பலர் வாகனங்களை லாங்குபஜாரில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் லாங்குபஜார் மார்க்கெட் பகுதியில் நேற்று ஏராளமான போலீசார் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டி மற்றும் தரைக்கடைகளை அப்புறபடுத்துமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர். இதனால் வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தினர். கடைகளை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பழைய மீன்மார்க்கெட் பகுதிக்கு கொண்டு சென்றனர்.
வாகன நிறுத்துமிடம்
மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். எந்தவித காரணத்தைக் கொண்டும் நடைபாதையை ஆக்கிரமிக்க கூடாது, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றிய பிறகு அந்த பகுதியில் பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு சென்று வர மிகஎளிதாக இருந்தது. ஆனால் மார்க்கெட்டுக்கு வருபவர்கள் வண்டியை நிறுத்த இடமில்லாமல் திணறினர். லாங்குபஜாரில் ஆக்கிரமிப்பு கடைகள் வைக்க அனுமதிக்கக் கூடாது. மார்க்கெட் பகுதிக்கு வரும் பொதுமக்கள் வசதிக்காக பிரத்தியேகமாக வாகன நிறுத்துமிடம் அமைத்துக் கொடுத்தால் அந்த பகுதியில் நிரந்தரமாக நெரிசலை தடுக்க முடியும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.