சொத்து வரி உயர்வை கண்டித்து பேரூராட்சி கூட்டங்களில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சொத்து வரி உயர்வை கண்டித்து பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம் ஆகிய பேரூராட்சி கூட்டங்களில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பாலக்கோடு:
சொத்து வரி உயர்வை கண்டித்து பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம் ஆகிய பேரூராட்சி கூட்டங்களில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பேரூராட்சி கூட்டம்
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கார்த்திகா முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சங்கர்கணேஷ் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோவிந்தன், அனிதா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்த அவர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன் பிறகு பேரூராட்சி அலுவலகத்திற்கு வெளியே வந்து சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்து கூட்டத்தில் சொத்து வரியை உயர்த்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாலக்கோடு
பாலக்கோடு பேரூராட்சி கூட்டம் தலைவர் முரளி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் தஹாசினா இதாயத்துல்லா முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் டார்த்தி அறிக்கை வாசித்தார். இந்த கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சொத்து வரி உயர்வு குறித்து கவுன்சிலர்கள் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.
இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குருமணிநாதன், விமலன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தும், சொத்து வரி உயர்வை கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர். அதன்பின்னர் சொத்து வரி உயர்வு குறித்து தீர்மானம் நிறைவேறியது.
காரிமங்கலம்
காரிமங்கலம் பேரூராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சொத்து வரியை மாற்றி அமைப்பது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதை கண்டித்தும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நாகம்மாள், இந்திராணி, செவத்தா ஆகியோர் கருப்பு பேட்ஜ் அணிந்து வெளிநடப்பு செய்தனர். முடிவில் 11 கவுன்சிலர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.