வேலூரில் தொழிலாளி தவறவிட்ட பர்சை மீட்டு ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்
வேலூரில் தொழிலாளி தவறவிட்ட பர்சை மீட்டு ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை துணைபோலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
வேலூர்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அழகுசேனை பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 40), தச்சுத்தொழிலாளி. இவர் நேதாஜி மார்க்கெட்டில் பொருட்கள் வாங்குவதற்காக வந்தார்.
நியூசிட்டிங் பஜார் சாலையில் சென்ற போது எதிர்பாராத விதமாக அவருடைய பர்ஸ் தவறியது. அதில், ரூ.11 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம்., பான் கார்டு உள்ளிட்டவை இருந்தன. இதுகுறித்து புருஷோத்தமன் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாவீரன் அந்த பர்சை கண்டெடுத்தார்.
பின்னர் உடனடியாக அவர் அதனை வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அதையடுத்து புருஷோத்தமன் போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் முன்னிலையில் அவரிடம் பர்சை மாவீரன் வழங்கினார். அதனை பெற்றுக்கொண்டு புருஷோத்தமன் நன்றி கூறினார். ரூ.11 ஆயிரம் பணத்துடன் கீழே கிடந்த பர்சை எடுத்து, அதனை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் மாவீரனின் நேர்மைக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.