மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.

Update: 2022-04-11 16:59 GMT
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில், சம்பா சாகுபடி அறுவடைக்காக மாவட்டம் முழுவதும் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நடப்பு ஆண்டு 2 லட்சத்து 4 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், நிா்ணயிக்கப்பட்டதை விட 18 ஆயிரம் டன் கூடுதலாக, அதாவது 2 லட்சத்து 22 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக வைக்க சேமிப்பு கிடங்கு வசதி இல்லாததால் மாவட்டம் முழுவதும் சுமார் 65 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல் நிலையத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளன.
மழையில் நனைந்து வீணாகிறது
 தற்போது மழை பெய்து வருவதால் மழைநீர் தேங்கி நிற்கக்கூடிய பகுதிகளில் உள்ள ஒருசில கொள்முதல் நிலையங்களில் மட்டும் நெல் மூட்டைகள் அகற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஆனால், மணக்குடி உள்பட மற்ற கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாததால் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. 
 லேசான மழைக்கே ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் பாதிப்படைந்துள்ள நிலையில், கனமழை பெய்தால் அதிக அளவு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்