மலைவாழ் மக்கள்உழவுப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
மலைவாழ் மக்கள்உழவுப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
தளி,
வனப்பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் மலைவாழ் மக்கள்உழவுப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மலைவாழ் மக்கள்
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை, ஈசல்தட்டு, பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.அதுவும் இயற்கை விவசாயத்திற்கு காலங்காலமாக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
நெல், தினை, சாமை, ராகி, இஞ்சி, மரவள்ளி, தென்னை, வாழை, எலுமிச்சை, பட்டர் பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகின்றன. வடுமாங்காய், நெல்லிக்காய், தேன், கடுக்காய், சீமாறு, தைல புல் உள்ளிட்டவை சீசனுக்கு ஏற்றாற்போல் வனப்பகுதியில் இயற்கையாக விளைகின்றன.
வாழ்வாதாரம் கேள்விக்குறி
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவியது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து போனதால் மலைவாழ் மக்களால் விவசாயத் தொழிலில் ஈடுபட முடியவில்லை.மேலும் சுய தொழிலுக்கு உதவிகரமாக இருந்த தைலப்புற்கள், சீமாறு தயாரிக்க பயன்படும் கீற்றுகள் வறட்சியின் காரணமாக கருகிவிட்டன.
ஆனால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பைக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்தனர்.வறட்சியின் காரணமாக வனப்பகுதியில் செடிகள், மரங்கள் காய்ந்து விட்டதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயத்தொழில் தடைபட்டதால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வந்தது.
உழவுப்பணி தொடக்கம்
இந்த சூழலில் கடந்த 4 நாட்களாக ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளதுடன் இதமான சீதோஷ்ண நிலையும் நிலவுகிறது. அத்துடன் மழையின் காரணமாக நிலமும் உழவுக்கு தயாராகி உள்ளது.
இதனால் மலைவாழ் மக்கள் மாடுகள் பூட்டிய ஏர் கலப்பையைக் கொண்டு நிலத்தை உழுது பண்படுத்தி நெல், காய்கறிகள் உள்ளிட்ட சாகுபடி பணிகளை தொடங்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வானம் பார்த்த பூமியாக காணப்பட்ட விளைநிலங்கள் ஏர் கலப்பை ஆட்கள் மையமாக பரபரப்பாக காணப்படுகிறது.