‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீருடன் கலக்கும் கழிவுநீர், தீர்வு கிடைக்குமா?
சென்னை வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் கோவிலை சுற்றி உள்ள நான்கு மாடவீதிகளில் நீண்ட நாட்களாக தண்ணீர் சரியாக வருவதில்லை. மேலும், சில நேரங்களில் வரும் தண்ணீரிலும் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
- கிரிஷ் வெங்கட், வில்லிவாக்கம்.
பெயரே இல்லாத பெயர்ப்பலகை
சென்னை அயனாவரம் உஜினிதேவி தெருவின் பெயர்பலகை சேதமடைந்து பெயரே இல்லாமல் வெறும் சட்டங்கள் மட்டுமே இருக்கின்றது. இதனால், தெருவிற்கு புதிதாக வருபவர்களும், கூரியர் கொடுக்க வருபவர்களும் விலாசம் தேடி அலையும் நிலை ஏற்படுகிறது. எனவே, தெருவின் அடையாளமாகிய பெயர் பலகையை சரி செய்து தர வேண்டும்.
- ஜோதிராஜ், அயனாவரம்.
சேதமடைந்த குடிநீர் குழாய்
சென்னை மணலி பெரிய சேக்காடு ராஜா நகர் பகுதியில் பள்ளம் தோண்டும் வேலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளம் தோண்டும் பணியின்போது எதிர்பாராத விதமாக சாலையில் உள்ள குடிநீர் குழாய் சேதமடைந்துவிட்டது. இதனால், குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. சேதமடைந்த குடிநீர் குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
- சரவணன், மணலி.
சாலையில் இடையூறு
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 53-வது தெருவில் உள்ள சாலையில் கேபிள் வயர் புதைக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. கேபிள் வயர் வெளியே தெரியும்படியும் கிடக்கிறது. சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் கால் தடுக்கி கீழே விழுந்துவிடும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. எனவே சாலையோடு சேர்த்து இணைத்துள்ள கேபிள் வயரை அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- சாலைவாசிகள்.
குண்டும் குழியுமான சாலை
சென்னை முகப்பேர் மேற்கு அயப்பாக்கம் பார்த்த பேட்டை பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. மேலும், இந்த சாலையில் பள்ளிக்கூடம் இருப்பதால் குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் சிரமத்துடன் பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- மொஹமது அலி, முகப்பேர் மேற்கு.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னை அடையாறு இந்திரா நகர், ரங்கநாதபுரம் அரங்கநல் சாலை, கால்வாய் கறை சாலை ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. மேற்கண்ட பகுதிகளில் பல நாட்களாக கொசுமருந்தும் தெளிக்கப்படவில்லை. எனவே, சுகாதார சீர்கேட்டை வழிவகுக்கும் கொசு தொல்லையை தடுக்க, இப்பகுதிகளில் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- கிரி, அடையாறு.
மின்வாரியம் கவனிக்குமா?
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு கணபதி நகர் பகுதியில் இருக்கும் மின்கம்பம் நீண்ட நாட்களாக பழுதடைந்து காணப்படுகிறது. சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்தும், ஆங்காங்கே உடைந்தும் காணப்படுவதோடு, கம்பிகள் வெளியே தெரியும்படியும் இருக்கின்றது. பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைத்து தர மின்வாரியம் நடவடிக்கை மேற்கொள்ளுமா?
- ஜெயபால், திருவேற்காடு.
சாலையில் பள்ளம்
சென்னை தியாகராயர் நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தனியார் அரங்கம் அருகே இருக்கும் பள்ளம் மூடப்படாமல் உள்ளது. மேலும், இந்த பள்ளத்தை தற்காலிகமாக பலகையை வைத்து மூடி வைத்துள்ளனர். இதனால், இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பள்ளத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படுமா?
- வாகன ஓட்டிகள்.
உடைந்த குடிநீர் குழாய் சரி செய்யப்படுமா?
செங்கல்பட்டு மாவட்டம், ஆலம்பாக்கம் கே.கே.நகர் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்த நிலையில் இருக்கிறது. இதனால், கடந்த 10 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை விரைந்து சரி செய்து தர வேண்டும்.
- சீனிவாசன், கே.கே.நகர்.
பராமரிப்பின்றி இருக்கும் பஸ் நிறுத்தம்
சென்னை அமைந்தகரை ரெயில்வே காலனி மேத்தா நகர் பஸ் நிறுத்தத்தை ஒட்டி, அதிகளவு குப்பைகள் கொட்டப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால், பஸ் நிறுத்தமே துர்நாற்றம் அடிப்பதுடன், அலங்கோலமாகவும் இருக்கிறது. மேலும், பஸ் நிறுத்தத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டும், ஆங்காங்கே கிழிந்து தொங்கிக் கொண்டும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து பஸ் நிறுத்தத்தை பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்களா?
- நிரஞ்சன், அமைந்தகரை.