விருந்தில் அதிகமாக கறி வைக்காததால் வாலிபர் மீது தாக்குதல்
நாகையில், விருந்தில் அதிகமாக கறி வைக்காததால் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகையில், விருந்தில் அதிகமாக கறி வைக்காததால் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கறி விருந்து
நாகை காடம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 35). இவரது அண்ணன் வீட்டில் சம்பவத்தன்று கறி விருந்து நடந்தது. இந்த விருந்தில் அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர்(40), சுந்தரமூர்த்தி(22) ஆகியோர் கலந்து கொண்டனர்.
தாக்குதல்
அப்போது விருந்தில் தங்களுக்கு கறி அதிகமாக வைக்கவில்லை என ஜெய்சங்கரும், சுந்தரமூர்த்தியும் சேகரிடம் கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெய்சங்கர், சுந்தரமூர்த்தி ஆகிய இருவரும் சேர்ந்து சேகரை உருட்டு கட்டையால் தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த சேகரை உறவினர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
2 பேர் கைது
இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்சங்கர், சுந்தரமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அதேபோல கறி விருந்தின்போது தன்னை கட்டையால் தாக்கியதாக சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் சேகர் மற்றும் அவரது உறவினர் மதியழகன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.