மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக ஏரிகளை புதுப்பிக்கலாம்; இந்திய அறிவியல் கழகம் கர்நாடக அரசுக்கு ஆலோசனை
மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக பெங்களூருவில் ஏரிகளை புதுப்பிக்கலாம் என்று கர்நாடக அரசுக்கு இந்திய அறிவியல் கழகம் ஆலோசனை கூறியுள்ளது.
பெங்களூரு:
5 நாடுகளில் அறிமுகம்
கர்நாடக அரசு, ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய அணையை காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் கட்ட முடிவு செய்துள்ளது. இந்த இடம் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. அதனால் புதிய அணை கட்டுவதால் 52 சதுர கிலோ மீட்டர் வனம் நீரில் மூழ்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வனத்தின் ஆண்டு மதிப்பு ரூ.81.60 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது இந்திய மதிப்பில் ரூ.100 கோடி), அதாவது ரூ.8,160 கோடி ஆகும். இந்த தகவலை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் (ஐ.ஐ.எஸ்.சி.) சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் இயற்கை முதலீடு கணக்கு மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு சேவைகள் திட்டத்தின்படி இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் முதல் கட்டமாக அதிக இயற்கை வளங்கள் மற்றும் பல்லுயிர் அதிகம் உள்ள இந்தியா உள்பட 5 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
பசுமை பட்ஜெட்
நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் தான் இத்தகைய மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மேகதாது திட்டத்தால் இயற்கை வளங்கள் இழப்பு குறித்து மதிப்பீடு செய்யும்படி வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இயற்கை வளங்கள் பற்றாக்குறையை சரிசெய்ய பசுமை பட்ஜெட் வடிவத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்திருந்தார். இதுபற்றி பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவில் எரிசக்தி மற்றும் தரிசு நில ஆராய்ச்சி குழு ஒருங்கிணைப்பாளரான விஞ்ஞானி டாக்டர் ராமச்சந்திரா கூறியதாவது:-
மேகதாது திட்டத்தால் நீரில் மூழ்கும் வனப்பகுதிகள் குறித்து மதிப்பீடு செய்தோம். இதற்கு முன்னர் உத்தரகன்னடா மாவட்டத்திலும் இத்தகைய மதிப்பீட்டை மேற்கொண்டோம். தொடக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை, கர்நாடகத்தில் 10 மாவட்டங்களில் இத்தகைய மதிப்பீட்டை செய்ய விரும்பியது. ஆனால் நாங்கள் அனைத்து மாவட்டங்களிலும்
இத்தகைய மதிப்பீட்டை செய்துள்ளோம்.
நீர் ஆதாரம் கிடைக்கிறது
மேகதாது திட்டத்தால் 4 ஆயிரத்து 835 எக்டேர் வன நிலம் நீரில் மூழ்கும். இதில்
3 ஆயிரம் எக்டேர் நிலம் காவிரி வன விலங்குகள் சரணாலயத்தை சேர்ந்தவை ஆகும். பருவமழை காலத்தில் அந்த பகுதியில் பெய்யும் மழையால் 100 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் ஆதாரம் கிடைக்கிறது.
கர்நாடக அரசு இந்த பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக இருந்தால் கர்நாடக வனத்துறைக்கு இழப்பீடாக 100 பில்லியன் வரை அதாவது ரூ.10 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும். 65 டி.எம்.சி. நீரை சேமிக்க ரூ.5,912 கோடியில் புதிய அணையை அரசு கட்டுகிறது. ஆனால் அங்கு தற்போது உள்ள வனப்பகுதி சுற்றுச்சூழலர் ஆண்டுக்கு 100 டி.எம்.சி. நீர் ஆதாரம் கிடைக்கிறது.
மழைநீர் சேகரிப்பு
இந்த பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்திற்கு மாற்றாக பெங்களூருவில் மழைநீரை சேகரிக்க நடவடிக்கைகளை எடுக்கலாம். பெங்களூருவில் ஆண்டுக்கு 850 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. இது 15 டி.எம்.சி. நீர் ஆகும். பெங்களூருவுக்கு குடிநீர் உள்பட பிற பயன்பாடுகளுக்கு ஆண்டுக்கு 18 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது.
மழைநீர் சேமிப்பு, கழிவுநீரை சுத்திகரித்தல் மூலம் பெங்களூருவுக்கு 30 டி.எம்.சி. நீர் கிடைக்கும். இது தான் சிறந்த மற்றும் பொருளாதார ரீதியாக உகந்த வழியாகும். 5 ஆயிரம் எக்டேர் வனப்பகுதியை அழிப்பதற்கு பதிலாக கர்நாடக அரசு ஏரிகளை புதுப்பிப்பதிலும், அதிகளவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதிலும் முதலீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு ராமச்சந்திரா கூறினார்.