திருவேற்காடு நகராட்சியில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு திட்டம்’

திருவேற்காடு நகராட்சியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு திட்டத்தை’ அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-04-11 12:18 GMT
திருவேற்காடு நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் காகிதப் பை, துணிப்பை போன்றவற்றை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு திட்டத்தை’ அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருவேற்காடு நகர்மன்ற தலைவர் மூர்த்தி, துணைத் தலைவர் ஆனந்தி ரமேஷ், நகராட்சி கமிஷனர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

ேமலும் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக நடைபெற்ற விழாவில் 191 ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் ரூ.73 லட்சம் மதிப்பிலான தாலிக்கு தங்கமும், ரூ.72 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவித் தொகையும் பால்வளத் துறை அமைச்சர் நாசர் வழங்கினார். விழாவில் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், மண்டல குழு தலைவர் ராஜேந்திரன், பணிக்குழு தலைவர் ஆசிம் ராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் ஹிதாயத்துன் நூரியா, சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்