அம்பத்தூர் அருகே தனியார் கம்பெனி ஊழியரை தாக்கி ரூ.82 லட்சம் வழிப்பறி
அம்பத்தூர் அருகே தனியார் கம்பெனி ஊழியரை கத்தியால் தாக்கி ரூ.82 லட்சத்தை வழிப்பறி செய்த 3 பேரை தேடி வருகின்றனர்.
ரூ.82 லட்சம் பறிப்பு
மதுரவாயல் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் விஜயகுமார் (வயது 37). இவர் நேற்று மதியம் 1 மணியளவில் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.82 லட்சத்தை எடுத்துக்கொண்டு கொடுங்கயூரில் உள்ள இரும்பு கம்பெனியில் ஒப்படைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், சென்னை புழல்-தாம்பரம் பைபாஸ் சாலையில் உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை மேம்பாலத்தில் வந்தபோது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் விஜயகுமாரை வழிமறித்தனர்.
பின்னர், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தி தாக்கினர். இதில் நிலைதடுமாறி தவறி விழுந்த அவரிடம் இருந்த ரூ.82 லட்சத்தை பறித்து சென்றனர்.
வலைவீச்சு
இதைக்கண்ட அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் உதவி கமிஷனர் கனகராஜ், இன்ஸ்பெக்டர்கள் ராமசாமி மற்றும் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபர் விஜயகுமாரை மீட்டு, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் எஸ்டேட் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி, 3 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் சாலையில் வாலிபர் ஒருவரை தாக்கி ரூ.82 லட்சத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.