260 புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் முட்புதரில் வீச்சு
260 புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் முட்புதரில் வீசப்பட்டிருந்தன.
திருச்சி:
வாக்காளர் அடையாள அட்டைகள்
திருச்சி செந்தண்ணீர்புரத்தில் முத்துமணி டவுன் பகுதியில் ரெயில்வே மைதானம் அமைந்துள்ளது. சாலையையொட்டி உள்ள இந்த மைதானத்தின் 3 பக்கமும் முட்புதர்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த பகுதியை பகல் மற்றும் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் மது அருந்தும் கூடமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
மேலும் இரவு நேரங்களில் சமூகவிரோத செயல்கள் அதிகமாக நடந்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இந்தநிலையில் அந்த முட்புதர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 260-க்கும் மேற்பட்ட புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளை மர்ம நபர்கள் வீசிச்சென்றுள்ளனர்.
விசாரணை
நேற்று காலை அந்த வழியாக சென்ற இளைஞர்கள் அதை பார்த்து இதுபற்றி பொன்மலை போலீசாருக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். அந்த வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டவை ஆகும். கடந்த 2006-ம் ஆண்டை தகுதிநாளாக கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்களுக்கு 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ந்தேதி அச்சடிக்கப்பட்டவை ஆகும்.
அதில் பொன்மலை, ரெயில்வே குடியிருப்பு, விவேகானந்த நகர், மூகாம்பிகை நகர், பாண்டியன் தெரு, ஆலத்தூர், தனலட்சுமி நகர் மற்றும் அதன் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளின் முகவரிகள் குறிப்பிடப்பட்டு இருந்தன. இதுபற்றி தகவல் அறிந்த, திருச்சி கிழக்கு தாலுகா குடிமைப்பொருள் வழங்கல் அலுவலக வருவாய் ஆய்வாளர் அந்தோணி, வரகனேரி கிராம நிர்வாக அலுவலர் ஜெய்கணேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த அடையாள அட்டைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதிகாரியிடம் ஒப்படைப்பு
அதிகாரிகளின் முதல்கட்ட விசாரணையில், அந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 2007-ம் ஆண்டு வாக்குச்சாவடி அதிகாரி ஒருவரிடம் அந்த புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் ஒப்படைக்கப்பட்டு இருந்ததும், அவர் அவற்றை வினியோகிக்காமல் 15 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைத்திருந்துவிட்டு, தற்போது அவற்றை அவர் தூக்கி வீசி இருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த அட்டைகள் அனைத்தையும் சேகரித்து திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அதிகாரியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.