ராமநவமியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை

ராமநவமியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-04-10 23:02 GMT
திருச்சி:

ராம நவமி
ராமர் அவதரித்த பங்குனி மாதம் நவமி திதியில் ஆண்டுதோறும் ராம நவமி கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு ராமநவமி நேற்று கொண்டாடப்பட்டது. திருச்சியில் ராமநவமியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திருச்சி பொன்மலைப்பட்டி மலை அடிவாரத்தில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் சீதா தேவி சமேத ராமர் மற்றும் லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் ராமரின் சிறப்புகளையும் வரலாற்றையும் பக்தர்களுக்கு பட்டர்கள் எடுத்து கூறினர்.‌ அதனைத்தொடர்ந்து தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மாலையில் இஸ்கான் குழுவினரின் பஜனை நடைபெற்றது.
திருக்கல்யாணம்
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர், லட்சுமணர், சீதாதேவி சமேதராக காட்சியளிக்கும் கோதண்ட ராமருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதேபோல் நகரில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் ராமருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோவில், உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்