ஆந்திர வாலிபர் கொலை வழக்கில் கள்ளக்காதலி உள்பட 3 பேர் கைது
ஆந்திர வாலிபர் கொலை வழக்கில் கள்ளக்காதலி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிக்பள்ளாப்பூர்:
ஆந்திர வாலிபர் கொலை
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா புறநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 234-ல் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ந் தேதி 25 வயது மதிக்க வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கவுரிபிதனூர் புறநகர் போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அப்போது அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அந்த வாலிபர் ஆந்திர மாநிலம் ஹிந்துபூர் தாலுகா கொள்ளாபுராவை சேர்ந்த லாரி டிரைவர் பிரசன்ன குமா்ா (25) என்பது தெரியவந்தது.
கள்ளக்காதலி உள்பட 3 பேர் கைது
இதையடுத்து கவுரிபிதனூர் போலீசார் கொள்ளாபுரா சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிரசன்ன குமாருக்கும், பவித்ரா(29) என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. அவர் தலைமறைவாகி இருந்தார். இதையடுத்து போலீசார் செல்போன் சிக்னலை வைத்து பவித்ராவை மடக்கி பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அதில் பிரசன்ன குமாரை பவித்ரா, அவரது 2-வது கள்ளக்காதலன் ரிஷப் உள்பட 3 பேருடன் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து பவித்ரா உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
2-வது கள்ளக்காதலன்
மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது பவித்ராவுக்கு ஒருவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. ஹிந்துபூரில் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது பவித்ராவுக்கு லாரி டிரைவரான பிரசன்ன குமாருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் ஆகியுள்ளது. இருவரும் தனியாக சந்தித்து பேசி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதையடுத்து சில நாட்களில் பவித்ராவுக்கு தான் வேலை பார்த்து வரும் நிறுவனத்தின் மேலாளரான வட மாநிலத்தை சேர்ந்த ரிஷப் என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவர், முதலாவது கள்ளக்காதலன் பிரசன்ன குமாருக்கு தெரியாமல் பவித்ரா ரிஷப்புடன் கள்ளத்தொடர்பு வைத்து வந்தார்.
உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால்...
இதற்கிடையே பவித்ராவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பிரசன்ன குமார், அவரை பின்தொடர்ந்தார். அப்போது அவருக்கு ரிஷப்புடன் கள்ளக்காதல் இருப்பது தெரியவந்தது. இதனால் பிரசன்ன குமார், பத்ராவிடம், ரிஷப்புடனான காதலை கைவிடும்படி கண்டித்துள்ளார். ஆனால் பவித்ரா உல்லாசத்துடன் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு தனக்கு ரிஷப் தான் வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது. இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பிரச்சன்ன குமார் பவித்ராவுக்கு தொடர்ந்து இடையூறு செய்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பவித்ரா பிரசன்ன குமாரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினார். இதுபற்றி 2-வது கள்ளக்காதலனான ரிஷப்பிடம் கூறியுள்ளார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ந் தேதி பவித்ரா, பிரசன்ன குமாரிடம் நேரில் பேசவேண்டுமென்று ஹிந்துபூரில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்துள்ளார். அதன்படி பிரசன்ன குமார் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அங்கு வைத்து பவித்ரா, ரிஷப் மற்றும் அவரது நண்பர் சம்புலிங்கம் ஆகிய 3 பேரும் சேர்ந்து பிரசன்ன குமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
ஊர், ஊராக சுற்றினர்
இதையடுத்து கொலையை மறைக்க சம்புலிங்கத்தின் லாரியில் உடல் மற்றும் மோட்டார் சைக்கிளை போட்டு ஏற்றி கொண்டு சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூருக்கு கொண்டு வந்து வீசிவிட்டு விபத்து போன்று ஜோடித்துவிட்டு ஆந்திராவிற்கு திரும்பியுள்ளனர்.
இதைதொடர்ந்து அவர்கள் செல்போனை சுவிட்ச்-ஆப் செய்துவிட்டு போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஊர், ஊராக சென்று தங்கியது தெரியவந்தது. கைதான 3 பேர் மீதும் கவுரிபிதனூர் புறநகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.