ராம நவமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

ராம நவமியையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-04-10 20:53 GMT
ஈரோடு
ராம நவமியையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
ராமநவமி
ராம நவமி விழா தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு கோவில்களில் கொண்டாடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் ராம நவமி கொண்டாடப்பட்டது.
கோபி ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்திருக்கும் ஈஸ்வரன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு ராம நவமியையொட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
கோபி
இதேபோல் கோபி அருகே உள்ள கூகலூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சிவ பக்த ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. அப்போது சிவ பக்த ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 
கோபியில் உள்ள அனுமந்தராயன் கோவிலில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராமர், லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகிய சாமிகளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமி அருள்பாலித்தார். இதையடுத்து கோவிலில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. 
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர். 
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ராம நவமியையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. இதைத்தொடர்ந்து ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயர் ஆகிய சாமிகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து  அனுமன் வாகனத்தில் ராமர் சப்பர வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அந்தியூர்
அந்தியூர் தேர் வீதியில் மிகவும் பிரசித்தி பெற்றதும் புகழ் பெற்றதுமான பேட்டை பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ராமர், லட்சுமணர், சீதை, ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து ராமநவமி வேள்வி நடைபெற்றது. பின்னர் ராமர். பட்டாபிஷேகம் நடைபெற்றது.
ராமர் உற்சவர் சிலை தேரில் அலங்கரிக்கப்பட்டு கோவிலை 3 முறை சுற்றி வந்தனர். இதில் அந்தியூர், தவுட்டுப்பாளையம், அத்தாணி, ஆப்பக்கூடல், வெள்ளித்திருப்பூர், ஒலகடம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்