கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 24-ந் தேதி மாநாடு; சென்னிமலையில் நடந்த விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடக்கோரி வருகிற 24-ந் தேதி கவன ஈர்ப்பு மாநாடு நடத்துவது என சென்னிமலையில் நடந்த கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-04-10 20:38 GMT
சென்னிமலை
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடக்கோரி வருகிற 24-ந் தேதி கவன ஈர்ப்பு மாநாடு நடத்துவது என சென்னிமலையில் நடந்த கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்ப்பு- ஆதரவு
கீழ்பவானி வாய்க்காலில் பராமரிப்பு செய்ய கீழ்பவானி பாசன திட்டத்தின் கீழ் ரூ.933 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளில் உபரி நீர் வெளியேறுவது நின்று கடும் வறட்சி ஏற்படும். மேலும் குடிநீர் பஞ்சம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என்பதால் இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் எல்.பி.பி. சீரமைப்பு குழுவை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் மட்டுமே வீணாக உபரி நீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டு கடைக்கோடி விவசாயிகளுக்கும் முறையாக தண்ணீர் கிடைக்கும் என்றும், அதனால் இந்த திட்டத்தை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில், சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துளசிமணி தலைமை தாங்கினார். செங்கோட்டையன், வெங்கடாசலம் (தமிழக விவசாயிகள் சங்கம்), மே.கு.பொடாரன் (தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமை இயக்கம்), ஈ.வி.கே.சண்முகம் (தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்கம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் கோரிக்கைகள் குறித்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மு.ரவி பேசினார்.
மாநாடு
பின்னர் கூட்டத்தில், ‘விவசாயம், குடிநீர் மற்றும் சுற்றுச்சூழலை காக்க கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் உள்ள மண் கரைகளை மண்ணால் மட்டுமே பராமரிக்க வேண்டும். பழைய கட்டுமான பணிகளை வழக்கம்போல் செய்யலாம் என்றும், கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை அரசு ரத்து செய்யக்கோரி வருகிற 24-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாசன பகுதியில் கோரிக்கை மாநாடு நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர், ஈரோடு மாவட்ட கரும்பு வளர்ப்போர் சங்கத்தினர், டிராக்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பாசன பகுதி விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்