தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சாலை சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி குமரன்குடி ஊராட்சி கீழத்தெருவில் இருந்து மேலத்தெருவுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி குண்டும், குழியுமான சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், கும்பகோணம்.
தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள கிழக்கு போலீஸ் நிலையம் அருகே சாலையின் நடுவே பாதாள சாக்கடை குழி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழி பராமரிப்பு பணிக்காக திறக்கப்பட்டது. ஆனால் பணி முடிந்தும் பாதாள சாக்கடை குழி மூடப்படாமல் உள்ளது. மேலும், சாலையின் நடுவே சாக்கடை மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி சாலை நடுவே திறந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடை குழியை மூட நடவடிக்கை எடுப்பார்களா?
-சக்திவேல், தஞ்சை.