மதுரையில் இருந்து சேலத்துக்கு காரில் கஞ்சா கடத்தல்
மதுரையில் இருந்து சேலத்துக்கு காரில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சேலம்:-
சேலம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு முரளி தலைமையில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், செல்வம் மற்றும் போலீசார் சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மதுரை பெரியார் நகர், ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அன்புராஜ் மகன் அபினேஷ் (வயது 25) என்பது தெரிந்தது. அந்த காரில் சோதனை நடத்திய போது மூட்டை, மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. அந்த கஞ்சா மதுரையில் இருந்து சேலத்துக்கு விற்பனைக்கு கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. உடனே போலீசார் அபினேசை கைது செய்து அவரிடம் இருந்து 100 கிலோ கஞ்சா மற்றும் கடத்தி வந்த காரை பறிமுதல் செய்தனர். மேலும் சேலத்தில் யாரிடம் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.