காருகுறிச்சி அருணாசலம் நூற்றாண்டு விழா ஊர்வலம்
நெல்லையில் காருகுறிச்சி அருணாசலம் நூற்றாண்டு விழா ஊர்வலம் நடைபெற்றது.
நெல்லை:
வீரவநல்லூர் அருகே உள்ள காருகுறிச்சியை சேர்ந்த பிரபல நாதஸ்வர கலைஞர் காருகுறிச்சி அருணாசலம். நாதஸ்வரம் மூலம் புகழ்பெற்ற இவர் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, முன்னாள் முதல்-அமைச்சர்கள் காமராஜர், அண்ணா உள்ளிட்டோரிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். நாதஸ்வர இன்னிசைக்கு புகழ் சேர்த்தவர். கொஞ்சும் சலங்கை எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற சிங்கார வேலனே, தேவா என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். காருகுறிச்சி அருணாசலத்தின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24-ந்தேதி தொடங்கியது. பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பில் தமிழகத்தில் பல இடங்களிலும் அவரது நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்ட தமிழ் நாதஸ்வர இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் காருகுறிச்சி அருணாசலத்தின் நூற்றாண்டு விழா நெல்லை டவுனில் நேற்று கொண்டாடப்பட்டது.
தொடக்க நிகழ்ச்சியாக நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு இருந்து காருகுறிச்சி அருணாசலம் உருவப்படம் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பெண் நாதஸ்வர கலைஞர்கள் உள்பட நூற்றுக்கணக்கான தவில் மற்றும் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் நாதசுர இசை பேரணியை நடத்தினர். பேரணியில் காருகுறிச்சி அருணாசலத்தால் இசைக்கப்பட்ட பாடல்களை நாதசுரத்தில் உற்சாகத்துடன் இசைத்து சென்றனர்.
குறிப்பாக சிங்கார வேலனே தேவா என்ற பாடலை இசைத்து சென்றது அனைவரையும் ஈர்த்தது. தொடர்ந்து நிகழ்வில் காருகுறிச்சி அருணாசலம் குறித்தும், நாதஸ்வரம் பற்றியும் கருத்தரங்கமும், இசை சங்கம நிகழ்ச்சியும் நடைபெற்றது.