சொத்து வரி உயர்வு மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது
சொத்து வரி உயர்வு மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
சிவகாசி,
சொத்து வரி உயர்வு மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
திறப்பு விழா
பா.ம.க.வின் விருதுநகர் மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு விழா நேற்று சிவகாசியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்பு மணி ராமதாஸ் எம்.பி., கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லை. இதனால் இங்கு புதிய தொழிற்சாலைகளை தொடங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் 80 சதவீத வேலைகளை உள்ளூர் மக்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக மதுவிலக்கு கொள்கையை அறிவிக்க வேண்டும்.
சொத்து வரி
பட்டாசுக்கு எதிராக நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். பட்டாசு தொழிலை காப்பாற்ற பாட்டாளி மக்கள் கட்சி போராடும். சொத்து வரி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஜி.எஸ்.டி. மற்றும் கொரோனாவால் வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது தான் அதில் இருந்து மீண்டு வருகிறார்கள். இந்த நிலையில் சொத்து வரி உயர்வு அறிவிப்பு பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பரவாயில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இந்த பிரச்சினைகளில் எந்த அரசியல் கட்சியும் தலையிட கூடாது. அப்படி தலையிட்டால் அந்த அரசியல் கட்சிகளுக்கு எதிராக பா.ம.க. களம் இறங்கும்.
யாருடன் கூட்டணி
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு மதுரை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இது யாருக்கும் எதிரான இடஒதுக்கீடு கிடையாது. கடந்த 40 ஆண்டு கால போராட்டத்துக்கு பின்னர் இந்த இடஒதுக்கீடு கிடைத்தது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வலியுறுத்தினோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. அப்போது யாருடன் கூட்டணி என்று பார்த்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.