கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராம நவமியன்று 10 நாள் பெருந்திருவிழா துவங்கும். அதன்படி முதல் நாள் கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருகில் கொடிமரத்தில் ஏற்றுவதற்கான ஆஞ்சநேயர் கொடி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. இதில் ஆதீன பரம்பரை தர்மகர்த்தாக்கள் ராமதாஸ் படையாட்சி, வெங்கடாஜலபதி படையாட்சி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய்த்தொற்று காரணமாக தேர்த் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா சிறப்பாக நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முதல் நாள் திருவிழாவான நேற்று சூரிய வாகனத்தில் பெருமாள் இரவு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சாமி திருவீதி உலா நான்கு வீதிகள் வழியாக நடந்தது.