கிராமத்தை நோக்கி காவல்துறை நிகழ்ச்சி
மாயனூர் அருகே கிராமத்தை நோக்கி காவல்துறை நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கிராமத்தை நோக்கி காவல்துறை என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மாயனூர் அருகே உள்ள கோவக்குளத்தில் கிராமத்தை நோக்கி காவல்துறை நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இணையவழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடைபெறும்போது அச்சமின்றி போலீசாருக்கு புகார் தெரிவிக்க வேண்டும். இணையவழி மூலம் தனிநபர் வங்கி கணக்கில் பணம் மோசடி செய்பவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டி அரசு அறிவித்துள்ள 1930 என்ற எண்ணுக்கு உடனே புகார் தெரிவிக்க வேண்டும். இதனுடைய தனித்துவத்தை மக்கள் தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் சமூக நல்லிணக்கம், குழந்தைகள் திருமணம் தடுப்பு, சட்டம்-ஒழுங்கு பராமரித்தலில் மக்களின் பங்கு, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதின் அவசியம் பற்றியும் கூறினார். மாணவ- மாணவிகள் தங்களுடைய படிப்பு திறனையும், விளையாட்டு திறனையும் வளர்த்து கொள்வதின் மூலம் எதிர்காலத்தில் மேற்படிப்புகளிலும், வேலைவாய்ப்புகளிலும் அரசின் சலுகைகள் பெற முடியும். மாணவ- மாணவிகள் நூலகங்களை பயன்படுத்தி கற்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.