காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டத்தை காங்கிரஸ் வரவேற்கவேண்டும்- சந்திரகாந்த் பாட்டீல் கூறுகிறார்
இந்துத்வா சான்றிதழ் பெற வேண்டுமானால் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டத்தை காங்கிரஸ் வரவேற்கவேண்டும் என சந்திரகாந்த் பாட்டீல் கூறுகிறார்.
புனே,
கோலாப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கோலாப்பூர் வடக்கு தொகுதி பாரம்பரியமாக இந்துத்வாவாதிகளிடம் இருந்து வருகிறது. இப்போது இந்த தொகுதி இந்துத்வா மீது நம்பிக்கை இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது. கோலாப்பூரில் இந்துத்வாவை பாதுகாக்க விரும்பினால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தை நீக்கியதற்கு காங்கிரஸ் வரவேற்பு தெரிவிக்க வேண்டும். அப்படி செய்தால் காங்கிரசும் இந்துத்வாவாக மாறிவிடும்.
கோலாப்பூரில் காவிக்கு வாக்களிக்குமாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். காவி என்றால் காங்கிரஸ் கட்சியா அல்லது பா.ஜனதாவா என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டும். காவி என்பது காங்கிரஸ் இல்லை. பா.ஜனதா என்பதை வாக்காளர்கள் அறிவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் விமானம் தாங்கி போர் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தை பாதுகாக்க வசூலித்த ரூ.57 கோடிக்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக பா.ஜனதா தலைவர் கிரித் சோமையா மற்றும் அவரது மகன் நீல் சோமையா மீது தொடரப்பட்ட வழக்கு குறித்து கூறிய அவர், “ஒரு காரணத்திற்காக சேகரித்த பணத்தை வேறு காரணத்திற்காக செலவழிப்பதும், வங்கி கணக்கில் வைத்திருப்பதும் வேறு விதமானவை. வங்கியில் பணத்தை வைத்திருப்பதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? கிரித் சோமையா அந்த பணத்தை பயன்படுத்தி ஏதாவது சொத்து வாங்கி இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்.