வியாபாரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை

கோவை மதுக்கரை அருகே வாழை வியாபாரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

Update: 2022-04-10 17:18 GMT
கோவை

கோவை மதுக்கரை அருகே வாழை வியாபாரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். 

வாழை இலை வியாபாரி

கோவையை அடுத்த மதுக்கரை அண்ணா நகரை சேர்ந்தவர் பாண்டி (வயது 41). இவர் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று பாண்டியின் மனைவி அந்த பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் பாண்டி மட்டும் இருந்து உள்ளார்.  

இரவில் அவர் காற்றோட்டத்திற்காக கதவை திறந்து வைத்து தூங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் இவரது வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். 

பின்னர் அவர்கள் வீட்டில் ஒரு பீரோவில் இருந்த 16¾ பவுன் நகைகள் மற்றும் ரூ.22 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.

போலீசார் விசாரணை

மறுநாள் காலையில் வழக்கம்போல் எழுந்த பாண்டி பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் டவுசர் கொள்ளையர்கள் மதுக்கரை பகுதியில் பூட்டி கிடக்கும் வீடுகளை குறி வைத்து திருடி வந்தனர். 

இந்த நிலையில் மீண்டும் அந்த பகுதியில் ஒரு வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை விரைந்து போலீசார் பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்