வாளவாடியில் மழை கொட்டி தீர்த்தது

வாளவாடியில் மழை கொட்டி தீர்த்தது

Update: 2022-04-10 17:11 GMT
தளி, -
வாளவாடியில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி  அடைந்தனர்.
சாகுபடி
உடுமலை, தளி, மடத்துக்குளம் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாகும். இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதி அணை, கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  
தென்னை, மா, சப்போட்டா, கொய்யா போன்ற நீண்ட கால சாகுபடி பயிர்களிலும் ஆண்டு பயிர்களான கரும்பு, வாழை, மஞ்சள்,  காய்கறிகள், கீரைகள், தானியங்கள் சாகுபடியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடுமலை சுற்றுப்புற பகுதியில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். கிணறு ஆழ்குழாய் கிணறுகளை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி செய்யப்பட்ட பயிர்களும் வாடி வதங்கியது.  மானாவாரியாக சாகுபடி செய்யட்ட பயிர்கள் கருகி வந்தது.
மழை
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக உடுமலை பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து  இதமான சீதோசண நிலை நிலவுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினமும் நேற்றும் வாளவாடி, தளி பகுதியில் பலத்த மழை பெய்தது.தொடர் மழையால் நீராதாரங்களுக்கு நீர்வரத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வளர்ந்து விளைச்சலை அடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 
திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி பகுதியிலும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் அதிகம் வந்தனர். புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் அணைப் பகுதி, நீச்சல்குளம், பஞ்சலிங்கஅருவி, கோவில் உள்ளிட்ட இடங்களில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து புகைப்படமும் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்