தொப்பூர் கணவாயில் வெவ்வேறு விபத்துகளில் டிரைவர்கள் காயம்

தொப்பூர் கணவாயில் வெவ்வேறு விபத்துகளில் டிரைவர்கள் காயம்

Update: 2022-04-10 16:55 GMT
நல்லம்பள்ளி:
 தொப்பூர் கணவாயில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் டிரைவர் காயம் அடைந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டிப்பர் லாரி
ஆந்திர மாநிலத்தில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு சிமெண்டு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்தது. லாரியை அரக்கோணம் பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். லாரி தொப்பூர் கணவாயில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் ஒன்றிணைந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சம்பந்தப்பட்ட மீட்பு படையினர் சீர்செய்தனர். விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு சோப்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்தது. லாரியை உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெரம்பால் (35) என்பவர் ஓட்டி வந்தார். லாரி தொப்பூர் கணவாய் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மற்றொரு டிப்பர் லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படை ஒன்றிணைந்து விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்