தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திண்டுக்கல்லில் வத்தலக்குண்டு சாலையில் பேகம்பூர் பஸ் நிறுத்தம் அருகே சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. மேலும் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளும் வீசப்படுகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கரீம், திண்டுக்கல்.
வீடுகளுக்குள் புகும் மழைநீர்
உத்தமபாளையம் தாலுகா கோம்பை கருப்பணபிள்ளை தெருவில் மழைநீர் வழிந்தோட வடிகால் வசதி செய்யப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது தொடர்கதையாக உள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழையால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். எனவே வடிகால் வசதியை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபினேஷ்வரன், கோம்பை
சமூக விரோதிகளின் கூடாரம்
ஆண்டிப்பட்டி பேரூராட்சி சக்கம்பட்டி அனுமார் கோவில் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் கீழ் பகுதியில் தினமும் இரவில் சமூக விரோத செயல்கள் அரங்கேறுகிறது. இதனால் அப்பகுதி தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சென்றாயபெருமாள், சக்கம்பட்டி.
வேகத்தடை அமைக்கப்படுமா?
பழனி இடும்பன்கோவிலில் இருந்து பாட்டாளி தெருவுக்கு செல்லும் வழியில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் கோவிலுக்கு வரும் பதர்கள் அவதிப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேக்பரீத், பழனி.