திருச்செந்தூர் செழிப்பான நகரமாக மாற்றப்படும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
திருச்செந்தூர் 2 ஆண்டுகளில் செழிப்பான நகரமாக மாற்றப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் 2 ஆண்டுகளில் செழிப்பான நகரமாக மாற்றப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தி.மு.க. பொதுக்கூட்டம்
தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிர்புறம் நடந்தது. கூட்டத்திற்கு, தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, நகர செயலாளர் வாள்சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் வரவேற்று பேசினார். கூட்டத்தில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
செழிப்பான நகரமாக மாற்றப்படும்
இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல தி.மு.க.அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சியாகும். திருச்செந்தூர் கோவிலை திருப்பதிக்கு இணையாக மாற்றக்கூடிய வகையில் தமிழக முதல்-அமைச்சரும், இந்து சமய அறநிலை துறை அமைச்சரும் சுமார் ரூ.250 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளனர். மேலும் திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் வந்து செல்வதற்கு தனி சாலை அமைக்கப்பட உள்ளது. அதேபோல் திருச்செந்தூருக்கு புதிய பஸ் நிலையம், நவீன மார்க்கெட், புதிய நகராட்சி கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் 2 ஆண்டுகளுக்குள் திருச்செந்தூரை செழிப்பான நகரமாக மாற்றப்படும். இதற்காக நமது பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நான் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் செயல்பட்டு வருகின்றோம். மேலும் திருச்செந்தூர் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் செழிப்படைய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
புதிய கால்நடை டாக்டர்கள்
ஒருவார காலத்தில் தமிழகம் முழுவதும் 1,105 கால்நடை டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்ட உள்ளனர். அவர்கள் அனைவரும் காலியாக உள்ள அனைத்து கால்நடை ஆஸ்பத்திரியிலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள். அதேபோல் கால்நடை உதவியாளர்களும் நியமனம் செய்யப்பட உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி கட்சி தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் தலைகாட்ட முடியாது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நிச்சயமாக மாநில கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஆட்சிதான் அமையும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில், மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தலைமை கழக பேச்சாளர் குடந்தை ராமகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின், மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரம்மசக்தி, பூபதி, ஜெயக்குமார் ரூபன், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுதாகர் நன்றி கூறினார்.