பெங்களூரு இளைஞர் கொலை குறித்து சி.ஐ.டி. விசாரணை; பசவராஜ் பொம்மை அறிவிப்பு
பெங்களூரு இளைஞர் கொலை குறித்து சி.ஐ.டி. விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
அரசுக்கு நெருக்கடி
பெங்களூருவில் கடந்த வாரம் சந்துரு என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பேட்டியளித்த போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, உருது மொழி பேசாததால் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் சந்துருவை கொலை செய்ததாக கூறினார். ஆனால் இதை மறுத்த பெங்களூரு போலீஸ் கமிஷனர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததாக கூறினார். இதையடுத்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தனது கருத்தை வாபஸ் பெற்றார்.
தவறான தகவலை வெளியிட்டதற்காக அரக ஞானேந்திராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இது கர்நாடக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பா.ஜனதா தலைவர்கள், சந்துரு கொலை குறித்து போலீஸ் கமிஷனர் தவறான தகவலை வெளியிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதுபற்றி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபா்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சி.ஐ.டி. விசாரணை
பெங்களூருவில் சந்துரு என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மையை வெளியே கொண்டு வர அரசு விரும்புகிறது. அதனால் இந்த வழக்கை சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் யார் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல. உண்மை வெளியே வர வேண்டும். இதுகுறித்து பெங்களூரு நகர போலீஸ் கமிஷனரிடம் பேசினேன்.
அவர் இந்த வழக்கை சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றுவது குறித்து போலீஸ் டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதுவார். விசாரணை பாகுபாடு இன்றி நடைபெற வேண்டும். அதனால் 3-வது அமைப்பு மூலம் விசாரணை நடத்தப்படுகிறது. மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து தேர்தலையொட்டி பிரசாரம் செய்ய 3 குழுக்களை அமைத்துள்ளோம். இந்த குழுக்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்ய உள்ளன. இந்த பிரசார குழுக்களில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, நளின்குமார் கட்டீல் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.