திருநீறு தயார் செய்து வழங்கும் திட்டம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் திருநீறு தயார் செய்து வழங்கும் திட்டம்
திருவண்ணாமலை
தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு தரமான திருநீறு மற்றும் குங்குமம் வழங்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் 8 கோவில்களில் திருநீறு மற்றும் குங்குமம் தயார் செய்து வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், பழனி முருகன் கோவில், திருவானைக்காவல் ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் திருநீறு தயாரிக்கப்படுகிறது.
அதேபோல் சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், பண்ணாரி அம்மன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களில் குங்குமம் தயாரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று திருவேற்காட்டில் திருநீறு மற்றும் குங்குமம் தயார் செய்து வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அப்போது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் கலந்து கொண்டு அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் தயாரிக்கப்பட்ட திருநீறை திருவண்ணாமலை கற்பகவிநாயகர் கோவில், காமாட்சி அம்மன் கோவில், திருவத்திபுரம் வேதபுரீஸ்வரர் கோவில், செங்கம் ரிஷபேஸ்வரர் கோவில், படவேடு ரேணுகாம்பாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்கள் ஜோதிலட்சுமி, சந்திரசேகரன், அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் செயல் அலுவலர்கள், அருணாசலேஸ்வரர் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.