சாணார்பட்டி அருகே காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பாரிவேட்டை
சாணார்பட்டி அருகே காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பாரிவேட்டை நடந்தது.
கோபால்பட்டி:
சாணார்பட்டி அருகேயுள்ள கம்பிளியம்பட்டியை அடுத்த அம்மாபட்டியில் காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து அம்மன் அலங்காரம், முளைப்பாரி எடுத்தல், பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்று மாலை திருவிழாவில் பாரம்பரியமாக நடத்தப்படும் பாரிவேட்டை என்று அழைக்கப்படும் புலிவேட்டை நடந்தது. அதன்படி காட்டுக்கு வேட்டைக்கு செல்வது போல அம்மாபட்டி ஊர்மக்கள் கூட்டமாக கோவில் அருகில் உள்ள மைதானத்திற்கு சென்றனர். அங்கு புலி வேஷமிட்ட ஒருவர் முன்னே செல்ல 10-க்கும் மேற்பட்டோர் தலைப்பாகையுடன் கழுத்தில் மாலைகள் அணிந்து வேட்டைக்கு செல்வதுபோல கம்பு, ஈட்டி, அம்புகளுடன் அவரை துரத்தி சென்றனர். அப்போது புலி வேஷமிட்டவர் அவர்கள் மீது பாய வருவது போலவும், பின்னர் வேட்டைக்காரர்கள் அம்பு எய்தி புலியை கொல்வது போலவும் நடித்து காட்டப்பட்டது.
இதில் அம்மாபட்டி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் அம்மன் மஞ்சள் நீராடி பூஞ்சோலை செல்வதுடன் திருவிழா முடிவடைந்நது.