காட்பாடி தொகுதியில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற ஐ.டி. பார்க் தொடங்கப்படும். அமைச்சர் துரைமுருகன் பேச்சு
காட்பாடி தொகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஐ.டி. பார்க் அமைக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
காட்பாடி
காட்பாடி தொகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஐ.டி. பார்க் அமைக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
பகுதி நேர ரேஷன் கடை
காட்பாடி தாலுகா சேனூர் ஊராட்சி ஜி.என்.நகரில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். கூட்டுறவு இணை இயக்குனர் திருகுண ஐயப்பதுரை வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பொன்னையில் ஆஸ்பத்திரி
முல்லை நகரில் 200 குடும்ப அட்டைகள் உள்ளதாகவும் பகுதி நேர ரேஷன் கடை வேண்டும் என ஊராட்சி தலைவர் சாந்தி மனு கொடுத்துள்ளார். அங்கும் பகுதி நேர ரேஷன் கடை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. வருகிற ஆண்டில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ.1,000 கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை ரேஷன் கடையில் பெற்றுக்கொள்கிறார்கள்.
காட்பாடி தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளேன். கழிஞ்சூர் ஏரி, காட்பாடி ஏரியை இணைத்து அதனை சுற்றுலாத்தலமாக்கி படகு சவாரி விட ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளேன். காட்பாடி தொகுதியில் அரசு கலைக்கல்லூரி விரைவில் தொடங்கப்படும். பொன்னை பகுதியில் அரசு ஆஸ்பத்திரி தொடங்கப்பட உள்ளது.
ஐ.டி. பார்க்
படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக காட்பாடி தொகுதியில் சிப்காட் தொழிற்சாலையும், ஐ.டி. பார்க்கும் தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் ஊரில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கதிர்ஆனந்த் எம்.பி., காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், காட்பாடி ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் சரவணன், மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், சேனூர் நகர கூட்டுறவு கடன் சங்க செயலாளர் விஸ்வநாதன், தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநில செயலாளர் செல்வம், கூட்டுறவு நகர வங்கி முன்னாள் இயக்குனர் எஸ்.டி.அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ம.க. வைச்சேர்ந்த அசோக்குமார் தலைமையில் மாற்றுக் கட்சி நிர்வாகிகள் கரசமங்கலத்தில் நடந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தனர்.