கற்பழிப்பு கொலையைவிட கொடிய குற்றம்- மும்பை சிறப்பு கோர்ட்டு கருத்து
கற்பழிப்பு, கொலையைவிட கொடிய குற்றம் என மும்பை சிறப்பு கோர்ட்டு கூறியுள்ளது.
மும்பை,
கற்பழிப்பு, கொலையைவிட கொடிய குற்றம் என மும்பை சிறப்பு கோர்ட்டு கூறியுள்ளது.
சிறுமி கற்பழிப்பு
மும்பையில் கடந்த 2012-ம் ஆண்டு 15 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி 2 பேரால் கற்பழிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 28 வயது வாலிபர் உள்பட 2 பேரை கைது செய்தனர். வழக்கு விசாரணை நடந்து வந்த போது ஒரு குற்றவாளி உயிரிழந்துவிட்டார். எனவே 28 வயது வாலிபருக்கு எதிராக விசாரணை நடந்து வந்தது.
இதில் பாதிக்கப்பட்ட சிறுமி, வாலிபருக்கு எதிராக கோர்ட்டில் சாட்சியம் அளித்து இருந்தார். அதே நேரத்தில் வாலிபர் தரப்பில், "சிறுமி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு (உயிரிழந்தவர்) நபரை காதலித்ததாகவும், வாலிபரை வழக்கில் பொய்யாக சேர்த்து இருப்பதாகவும்" வாதிடப்பட்டது. எனினும் இதை ஏற்க சிறப்பு கோர்ட்டு மறுத்துவிட்டது.
கொடிய குற்றம்
மேலும் கோர்ட்டு, "சாதாரணமாகவே கற்பழிப்பு குற்றம் அதன் இயல்பிலே பயங்கரமானது. இந்தநிலையில் மனநலம் பாதித்த சிறுமிக்கு எதிராக இந்த வன்முறை அதை விட பயங்கரமானது. பெண்ணின் உயிரை அழிப்பதால் கற்பழிப்பு, கொலையைவிட கொடிய குற்றம்" என கூறி 28 வயது வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.